பாஜக வேட்பாளர் அண்ணாமலை

கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஐ.பி.எஸ்., திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகியதையடுத்து, தற்சார்பு விவசாயத்தில் களமிறங்கினார். அரசியல் ரீதியான பேட்டி, வலதுசாரி சிந்தனையாளர், சுயசார்பு பேச்சு, ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என பல யூகங்கள் அவரை சுற்றி வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆற்றலாலும், ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டதன் காரணமாக பாஜகவில் இணைந்தார்.

பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேராமல், சாதாரண தொண்டராகவே அக்கட்சியில் இணைந்தார் இந்த அண்ணாமலை ஐ.பி.எஸ். தமிழகத்தின் கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய தந்தை பெயர் குப்புசாமி. தாய் பரமேஸ்வரி, மனைவி அகிலா சுவாமிநாதன். கோவையில் பொறியியல் படித்த அண்ணாமலை, இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். 2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.


பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப் பெற்றார்.

2015ஆம் ஆண்டு உடுப்பியின் காவல்துறை கண்காணிப்பாளர், 2016ஆம் ஆண்டு சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், 2018ஆம் ஆண்டு பெங்களூர் தெற்கு மாவட்டத்தின் துணை ஆணையர் என சினிமா போலீஸ் பாணியில் தொடர்சியான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட அண்ணாமலை 2018ஆம் ஆண்டுக்குள் டி.சி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

கர்நாடக சிங்கம் என்று அறியப்பட்ட அண்ணாமலை, உடுப்பியில் பணியாற்றியபோது சட்டவிரோத சக்திகள் மீது அவர் எடுத்த நடவடிக்கைகளுக்காக கவனிக்கப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம் தனது ஐ.பி.எஸ். பணியை அண்ணாமலை ராஜினாமா செய்தார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், காக்கிச்சட்டை அணிந்து செயல்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் என்னால் மறக்க முடியாது என்றும் போலீஸ் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி என்பதை நம்புவதாகவும் சிலாகித்து பேசினார் அண்ணாமலை. ராஜினாமா செய்த அண்ணாமலை ‘வீ தி லீடர்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார். அது அரசியல் அமைப்பு அல்ல என்றும் அரசியலைத் தூய்மைப்படுத்தும் அமைப்பு என்றும் தெரிவித்த அவர், மக்களிடன் விழிப்பிணர்வை ஏற்படுத்தி வந்தார். சமூக பணிகளில் ஈடுபட்ட அண்ணாமலை, இயற்கை விவசாயம், நாட்டுமாடுகளை வளர்த்தும் வந்தார்.


வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்த அண்ணாமலை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுகமாக நிர்வகிப்பதாக கூறப்படும் Youth Thinkers Forum என்ற அமைப்பின் பல கூட்டங்களில் செற்பொழிவு ஆற்றினார். பின்னர் பாஜகவில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக்கொண்ட அண்ணாமலை, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த தன்னால் இயன்ற முயற்சியை செய்வேன் என்று உறுதிபட கூறினார். தற்போது, அதிமுக கூட்டணியில், பாஜகவின் வேட்பாளராக அரவக்குறிச்சி தொகுதியில் களம் காண உள்ளார் அண்ணாமலை.